சில விசயங்கள் - 5


    பூமியில் முதல் பகுப்படையும் செல் உருவாகி பரிணாம வளர்ச்சி பெற்று எப்படி இங்கு இதை எழுதி கொண்டு இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே அதிக ஆர்வம் உண்டு.கடவுள்தான் இந்த உயிர்களை படைத்து இருக்கிறார் என்று திடமாக நம்புவர்களை தவிர.

   அண்மையில் NASA ஒரு அனுமானத்தை வெளியிட்டு இருக்கிறது.நமது சூரிய குடும்பத்தில் அதுவும் குறிப்பாக பூமியில் எப்படி DNA மூலகூறுகள் தோன்றி செல்லாக மாறி உயிரினம் தோன்றி இருக்கலாம் என்பதைப்பற்றி.

   அவர்கள் இதற்கு காரணமாக சொல்வது பாஸ்பரஸ் அடங்கிய NEBULA CLOUDS இருக்கின்ற இடத்தின் வழியாக நமது சூரிய குடும்பம் பயணித்து வரும்போது அந்த CLOUDS நம் மீது மோதி அதிலுள்ள மூலகூறுகள் பூமியில் விழ சரியான தட்பவெட்ப சூல்நிலை அமைய அப்படியே உயிராக வளர்ந்து இருக்கலாம். என்கிறார்கள்.

   இந்த CLOUDS களை interstellar medium என்பார்கள்.இது வெடித்து சிதறிய நட்சத்திரங்களில் இருந்து வந்த துசுக்கள், பொருள்கள எல்லாம் அடங்கியது. அதாவது ionic, atomic, and molecular form, dust,carbon இந்த மாதிரி. இதுதான் காலப்போக்கில் ஒன்றோடு ஒன்று உரசி மீண்டும் ஒரு புதிய நட்சத்திரங்கள் உருவாக காரணமாக இருக்கும்.

சரி கொஞ்சம் விளக்கமாக கிழே உள்ள படத்தை பாருங்கள்.



   இதில் நமது சூரியன் நகர்ந்து போகும் திசை violet கலரில் இருக்கிறது.அது வந்த இடம் என்று பார்த்தால் gum nebula (பச்சை)மற்றும் local bubble(கருப்பு) என்ற இடம் வழியாக.

இந்த gum nebula தான் நட்சத்திர வெடிப்புக்கு பிறகு இருக்கும் மூலக்கூறுகளை கொண்ட நிலை.

   இதில் இருந்துதான் hydrogen, carbon, oxygen, nitrogen, cyanide போன்றவை இணைந்து நமது DNA வில் உள்ள adenine தோன்றியிருக்கலாம் என்றும், oxygen and phosphorus இவை இணைந்து DNA வின் இணை ஏணிகள் (base pairs) உருவாகியிருக்கலாம் என்கிறார்கள். இன்னும் நமது DNA வில் சில பொருட்கள் இந்த NEBULA வில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

 *********

   சிறுவயதில் அம்மா அப்பாவின் கண்டிப்பை பார்த்து வந்த கோபம இப்போதெல்லாம் வருவதே இல்லை. நண்பர்களோடு கோபம கொண்டது, என் தம்பியோடு சண்டை போட்டு ரெண்டு பேரும் சேர்ந்து அடிவாங்கியது, இது எல்லாமே அப்போது இருக்கும் பெரிய பிரச்சினைகள்.இப்போது இதை எல்லாம் நினைத்து பார்க்கும்போது சொல்ல முடியாத சில உணர்வுகள். எவ்வளவு அருமையாக இருக்கிறது. இவை எல்லவாற்றிக்கும் பின்னால் ஒரு பாசபினைப்பு கண்டிப்பாக இருந்ததுதான் உண்மை.

    இப்போது நான் வாழும் வாழ்க்கையில் கண்டிப்பாக இது கிடைக்க போவதில்லை.சிறுவயதில் சேட்டைகள் செய்தாலும் இப்போது பெற்றோர கண்டிக்கும் அளவுக்கு எதையும் செய்வதில்லை.தம்பியோடு சண்டையில்லை. நண்பர்கள் எல்லோரும் அவர்களின் வாழ்க்கையை பார்க்க வேலைகளில் இருக்கிறார்கள்.பாதிபேர் இன்னும் ஊருகளில்.  எல்லாமே வேகமாக நடந்து இந்த நிலமை வந்தது போல தோன்றுகிறது.அதே நேரத்தில் ஏன் இது வந்தது என்ற ஒரு கவலையும்.

   பணம் ஈட்டுவதுக்கான போட்டி என இவைகளோடு வாழும் வாழ்க்கை அலுப்பாக தோன்றுகிறது. சம்பாதிக்க வேண்டும், தந்திரமாக சூட்சுமதோடு வாழனும் என அறிவுரை சொன்னாலும் அதன் படி இருக்க சுத்தமாக ஈடுபாடில்லை. புத்தக வாசிப்பு, அன்பு செலுத்துதல்,கற்பனை செய்தால் இவற்றை தவிர இப்போதைய என் வாழ்க்கையில் ரசிக்க ஒன்றுமே இல்லைதான்.

  எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி முண்டியடித்து ஓடுவது போல தோன்றுகிறது அது என்னவென்றே தெரியாமல். என்னமோ நானும் இந்த ஓடுகளத்தில் வந்துவிட்டேன் என்பதுதான் உண்மை. கடவுளை தவிர்த்து என்மீது எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் சிலரும் அதில் இருப்பதால் அவர்களின் அனபுக்க்காகவாது அவர்களோடு ஓட வேண்டியது இருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

 *********

   ஊரில் சொந்தக்கார தாத்தா ஒருவர் அந்த காலத்திலயே ENGINEER (CIVIL) படிப்பு படித்துவிட்டு வேலை பார்த்ததால் அவரை எல்லோறும் ENGINEER தாத்தா என்றுதான் அழைப்போம். இடையிலேயே வேலையை RESIGN செய்துவிட்டு விவசாயம் பார்க்க தொடங்கி இன்னும் ஆள் வைத்து பார்த்து கொண்டு இருக்கிறார்.அருமையான மனிதர்.

   மிகுந்த மரியாதை கொண்டவர் என்பதால் எல்லோரும் அவரிடம் பேச தயங்குவார்கள். இதே காரணத்தால் அவரோடு சிறுவயதில் பேசியது இல்லை.நான் என்ன செய்கிறேன் எங்கு இருக்கிறேன் என்பதை என் அம்மாவிடம் கேட்டதாக சொல்ல போனமுறை சென்றபோது அவருடைய வீட்டுக்கு போய் இருந்தேன்.

   கடந்த பல வருடங்களாக தனியாக இருக்கிறார்.பேசிக்கொண்டு இருக்கும் போது பொழுதுபோக்காக புத்தகம் படிப்பேன் என்று சொல்ல என்ன மாதிரி புத்தகம் படிப்பாய் என்று கேட்டார்.

    நான் சில புத்தகங்களை சொல்ல, அதே ரகத்தில் புத்தகம் ஏதும்  இல்லையென்றும் வேறு புத்தகம் இருப்பதாக சொல்லி அலமாரியை காட்டினர்.கிட்டதட்ட 400 புத்தகங்களுக்கு மேல் இருக்கும்.தேடினேன் கொஞ்சம் விவசாயம், மீதம எல்லாமே ரஷ்யாவை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள்.

    எப்படி நம்ம ஊரில் இருந்து கொண்டு இந்த புத்தகங்களை வாங்கினீர்கள் என்று கேட்டதுக்கு எல்லாம் வேலை பார்க்கும்போது வாங்கியதாக சொன்னார். சம்பளத்தில் ஒரு பங்கை புத்தகத்திற்கு செலவிட்டுரிருக்கிறார்.அதுவரை வழக்கமாக பேசிக்கொண்டு இருந்தவன் சரியாக பேச முடியவில்லை. இவ்வளவு புத்தகங்கள் படித்து விட்டு எப்படி இவ்வளவு எளிமையாக இருக்க முடிந்தது இந்த மனிதரால் என்ற எண்ணம் மரியாதையை அதிகமாக்கியது.

    சில அறிவுரைகளோடு READER DIGEST ல் வந்த FOLK TALES AND FABLES OF THE WORLD (இது சின்ன பிள்ளைகள் படிக்கும் புத்தகம்) இன்னும் சில புத்தகங்ககளை எடுத்துக்கொண்டு கிளம்ப உனக்கு இந்த புத்தகம்தான் பிடிக்குதாக்கும் ஏன் ரஷ்யா பிடிக்காதா? என்று கேட்டததுக்கு அப்படியில்லை என்றுமட்டும் சொல்லிவிட்டு வந்தேன்.

 **********

   புத்தகம் படிக்க சில எளிய வழிகளை கையால்வதுண்டு.படிக்க வேண்டிய புத்தகங்களை ஒருபோதும் ஒழுங்காக அலமாரியில் அடிக்கி வைத்தது இல்லை. படுக்கை இடத்தில சிதறிதான் கிடக்கும். சும்மா இருக்கும் நேரங்களில் கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து ஆர்வம் இல்லாமல் நேரம்போக ஒரு இரண்டு பக்கம் வாசித்துவிட்டால் போதும் அந்த புத்தகம் முடிந்த மாதிரிதான். தொடக்கம்தான் கஷ்டமானது.

   இதையே இப்போதும் கடைபிடிக்கிறேன். படிக்க வேண்டும் என்று நினைத்து ஆர்வமாக படிக்கும் புத்தகங்கள் தனியாக இருந்தாலும் இந்த மாதிரி படிப்பவையும் அடங்கும்.எப்படியோ என் கண் முன்னால் புத்தகம் இருக்கிற மாதிரி பார்த்துகொண்டாலே போதும்.

அதே போல் கதையில் வரும் விசயங்கள் புரியாமல் ஒருபோதும் அடுத்த பக்கத்துக்கு நகர்ந்தது இல்லை. அது சம்பந்தமாக இணையத்தில் தேடி புரிந்துகொண்ட பிறகேதொடர்வேன். இது இன்னும் அதை பற்றி படிக்க ஆர்வத்தை கொடுப்பது போல ஒரு உணர்வு.

   ஒரு குறிப்பிட்ட நபர் எழுதிய புத்தகம் என்பதுக்க்காக எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக ஆர்வமில்லாமல் படித்தது இல்லை. அப்படி படிப்பதால் முடி கொட்டுமே தவிர வேறொரு பயனுமில்லை என்பது என் அனுபவம்.

சில விசயங்கள் - 4


   ரோமியை பற்றி சிறிய அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறேன். கணேஷ் என்பவர் என்னதான் தேடியும் காதல் செய்ய  பெண் கிடைக்காமல் தன்னை  காதலிக்க ஒரு பெண் மனம் கொண்ட ரோபோட்டை வடிவமைக்கிறார்.அதன் பெயர் ரோமி. அதோடு காதல் செய்யும் தருணங்களில் தவறுதலான புரிதலால் ரோமி அவரை கொலை செய்யும் அளவுக்கு போக ஒவ்வொரு முறையும் emergency button ஐ அழுத்தி தப்பித்துகொள்வது கணேஷின் வழக்கம். ரோமி கிட்டதட்ட ஆறறிவு தன்மை கொண்ட ஒன்று.


   சரி எதுக்கு திடிரென்று ரோமி புராணம் என்றால், உண்மையில் ஆறறிவு கொண்ட ஒரு ரோபோட்டை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதவாது தொடுஉணர்வு,நுகர்தல்,பார்வையில் கண்டறிதல் இந்த மாதிரி பல அம்சங்களை கொண்ட ஒன்று. இதற்கென்று சிறப்பான சென்சார்கள் அமைத்து இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும் என்பது அவர்களது(Leo van Hemmen, chair of theoretical biophysics, Technische Universitaet Muenchen.) நம்பிக்கை.


   இதற்காக உயிரினத்தில் இந்த உணர்வுகள் எப்படி கச்சிதமாக வேலை செய்கின்றன,அதை எப்படி இயந்திரத்தனமாக மாற்றலாம் என்பதை பற்றி ஒரு குழு ஆராய்கிறது. விரைவில் எல்லாம் வல்ல ரோபோட்டை எதிர்பார்க்கலாம்.
 *********

   எனது நிறுவனத்தில் நான் தினம் பார்க்கும் ரோபோட்டுகளின் (fanuc)வேலைத்தன்மையே ரோமி கதையை எழுத காரணம். எல்லாம் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதுக்கு பயன்படுத்தபடுவவைதான்.இயந்திர உதிரி பாகங்களை இனைத்தல், welding செய்தல் இந்த மாதிரி. இருந்தாலும் கொடுத்த வேலையை எந்தவித அலுப்பும்,மறுப்பும்,தவறும் இல்லாமல் செய்துமுடித்துவிட்டு ஓய்வெடுக்கும் ரகம். நாம் தவறு செய்தால் கத்தி  ரகளை செய்து “அறிவு இருக்கா? என்று கேட்கவும் தயங்காது. 


  பார்ப்பதற்க்கு ஏதோ சொந்த அறிவோடு வேலை செய்கிற மாதிரி தெரிந்தாலும் அது தவறு செய்யாமல் இருக்க ஒவ்வொரு நிலைக்கும் நாம் அதை interlock முறையில் கட்டுபடுத்த வேண்டும். அதவாது ஏதாவது  பொருளை  ரோபோட் ஒரு இடத்தில எடுத்து வந்து மற்றொரு இடத்தில வைக்க பின் அதை இன்னொரு ரோபோட் தன்பக்கம் இழுத்து வைத்து தனக்கு கொடுக்கபட்ட வேலையை செய்ய வேண்டும் இப்படி ஒரு நிலமையை எடுத்து கொண்டால், இதற்கு முதல் ரோபோட்டுகு அந்த பொருளை எப்படி பிடித்து (clamp) தூக்க வேண்டும்,எவ்வளவு உயரம மற்றும் அழுத்தத்தில் இந்த மாதிரி விசயங்களை சொல்லி கொடுக்க(robot teaching) வேண்டும்.


   இந்த முதல் ரோபோட் வேலை செய்யும்போது இரண்டாம் ரோபோட் தனது வேலையை செய்து கொண்டு இருக்கும் அதாவது ஏற்கனவே முதல் ரோபோட் கொடுத்த பாகத்தில். இப்போது முதலாமானது போய் பொருளை  வைப்பதுக்கான இடத்தில வைக்கும் வரை இரண்டமானது காத்து இருக்கும் ஒருவேளை அதன் வேலை முடிந்து இருந்தால்.எப்போது பொருள் வைக்கப்பட்டு முதலாமானது பாதுகாப்பான தொலைவு செல்கிறதோ அதுக்கு பிறகுதான் இரண்டாமானது தனது வேலையை செய்ய தொடங்கும்.இதற்கு நிறையா சென்சார்கள், limit switch கள் என பல பயன்படுத்தப்படும். இவைதான் interlock முறைக்கு பெரிதும் பயன்படுபவை.


  பொருள் வந்து வைத்தவுடன் “ஏய் பொருள் வந்துரிச்சி இன்னும் என்ன மச மசன்னு நின்னுகிட்டு? என்று ரோபோட்டுகு தகவல்களை கொடுப்பது இதுதான். இது அப்படி சொல்லாத வரை இரண்டாமானது சிவனே என்றுதான் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்க செய்வதும் இவைகள் தான். “இது நடந்த பிறகுதான் நீ இந்த வேலையை செய்ய வேண்டும், இல்லையென்றால் சும்மா இரு போதும் என்று ரோபோட்டுக்கு சொல்லி  ரோபோட்டின் இயக்கத்தை கட்டுபடுத்துவது ஒருவகையில் இந்த உபகரணங்கள்தான்.


   இது எனது முழுத்துறை இல்லையென்றாலும் ஆர்வம் அதிகம் உண்டு.நண்பர்களை தொந்தரவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுகொண்டு இருக்கிறேன். ஒருநாள் என நண்பனிடம் ரோமியை பற்றி விளக்கி அதை இன்னும் எப்படி உருப்படியாக எழுதலாம் அதுக்கு ரோபோடிக்ஸ் சம்பந்தமான அறிவுரை சொல்ல சொன்னேன். முழுதும் ரோமியை பற்றி கேட்டு தெரிந்து விட்டு, குறிப்பிட நேரத்துக்கு ஒருமுறை நீ கேட்காமலேயே முத்தம் கொடுக்கிற மாதிரி plc ல் program செய்து விடேன் என்றான்


   இதை ஏற்க்கனவே ஒருவர்(சுஜாதா சார்) நாய் குட்டியில் செய்துவிட்டார்.(ஜீனோ குறிப்பிட நேரத்திற்கு ஒருமுறை குறைக்கும்) வேறேதாவது சொல்லு என்றால் ஆளைவிடு என்று ஒதுங்கி விட்டான்.

******

   எழுத்தை பற்றிய கருத்துக்களோ,விமர்சனங்ககளோ தெரிவித்தால் எழுதுபவருக்கு சில விசயங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. நானும் எழுதுகிறேன் யார் படிக்கிறார்கள்? அவர்கள் என்ன புரிந்துகொண்டார்கள் என்பதை பற்றி தெரியாமல் போனால் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு.


   மற்றபடி சில பெண் பதிவர்களுக்கு அல்லது இலக்கிய நடையோடு எழுதும் பதிவர்களுக்கு வரும் “சொல்ல வார்த்தைகளே இல்லை “இந்த மாதிரி எழுத்து நடை உலகத்தில் உங்களுக்கு மட்டுமே" போன்ற மாதிரியான கருத்துகளை பற்றி கவலை இல்லைதான்.  இதன் மீது விருப்பம் இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் எனக்கும் இலக்கிய நடைக்கும் வெகு தூரம்.


   இதுவரை நான் எழுதி வந்தது எல்லாம் சுஜாதா அவர்கள் கனையாழியின் கடைசி பக்கத்தில் சொன்னது போல “எழுதியது புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் தலையை சொரிந்து கொள்ளுங்கள் என்ற ரகம்தான். 


   எது எப்படியோ இனிமேலும் முடிந்தவரை உருப்படியாக எழுத முயற்சிக்கிறேன்.இன்னும்பிற விசயங்களை பற்றி தொடர் போல எழுதும் ஆசை இருக்கிறது. பார்ப்போம் நான் படிப்பது எனக்கு புரிந்தால் கண்டிப்பாக அதை எழுத்தின் மூலம் சொல்வேன்.

 ******

(கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா அவர்கள் சொன்னது “புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் சொரிந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே. அதை அவர் அங்கு சொன்னதுக்கு காரணம் அவருக்கு வந்த விமர்சனம் தான்  என்று படித்த  நினைவு. அதனாலதான் இங்கு நான் “தலையை என்ற வார்த்தையை சேர்த்தேன். அங்கு சொன்னது சுஜாதா சாருக்கே உண்டான உள்குத்து எழுத்துநடை..)

நாம்


  (புத்தி உங்களுக்கு புதியவர் என்றால் ஒரு சிறிய அறிமுகம். அறிவியல் குறிப்பாக விண்ணியல் துறையில் உலகில் தலைசிறந்து விளங்கும் அறிவியலர்களில் இவரும் ஒருவர். தனியாக ஆய்வுக் கூடம் வைத்து ஆராய்ச்சிகள் செய்து வருபவர்)

   புத்தி அவரது அறையில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அங்கு இருந்து வரும் புகையினை வைத்தே சொல்லிவிடலாம்.அதிக புகைபழக்கம் கொண்டவர்.  அந்த அறையில் நான்கு சுவர்களுக்குப்  பதிலாக புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்ட்டிருக்கும்.கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள். அவரிடத்தில் பொறாமை கொள்ளும் விசயங்களில் இதுவும் ஒன்று.

   அவரது பதிலளிக்கும் விதம்  வித்தியாசமானது. கேள்விக்கு வெளிப்படையாகப்  பதிலைச் சொல்லாமல் அந்த விசயத்தை பற்றி நான் எவ்வளவு எப்படித்  தெரிந்து வைத்து இருக்கிறேன் என்பதை முதலில் தெரிந்துவிட்டு அதுக்கு தகுந்த மாதிரிப் பதிலளிப்பார்.

  நான் இந்த முறை போனபோது வாசலிலேயே நின்று இருந்தார். பார்த்தவுடன்..

“என்ன கணேஷ் நீ மட்டும் தனியா வாரே புனியை எங்கே?”

   “எப்போதும் அவளோடு சுத்தும் பழக்கம் இல்லை ..எனக்குப் பிடித்தாலும் அது அவளுக்கு பிடிக்காது என்றேன்.

   “சரி என்ன இந்த பக்கம் காரணம் இல்லாமல் வரமாட்டியே? ஏதாவது புத்தகம் வேணுமா என்ன?

   “இல்லை ஒரு சந்தேகம் அதான் கொஞ்சம் பேசிவிட்டுப் போகலாம்னு வந்தேன்

“அப்படியா இப்ப என்ன புதுசா சந்தேகம்? என்றார்

   “உங்களுக்குத் தெரிஞ்சவரையில் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா? அப்படியே இருந்தாலும் நமது பூமிக்கு வருவது சாத்தியாமா என்ன?

   “கொஞ்சம் கஷ்ட்டமான கேள்வி..சரி நீ சொல்லு வேற்றுக்  கிரகங்களில் உயிர் வாழ்வதுக்கான சாத்தியம் இருக்கா இல்லையா?

   “கண்டிப்பா இருக்கு, ஆனால் அது நம்ம மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லை அங்கு இருக்கிற தட்ப சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி இருக்கலாம். அதை நாம் கற்பனை செய்து பார்த்து சொலவது கஷ்ட்டம் என்றேன்

   “நீ சொல்வது சரிதான். அப்படியே இருந்தாலும் நமது கிரகத்தில் நம் இருப்பைக் கண்டுபிடித்து அவர்கள் வருவது நடக்கின்ற காரியம்னு நினைக்கிறியா?

    “இதில்தான் எனது சந்தேகம். குறிப்பாக கண்டுபிடித்து வருவதக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. தற்செயலாக நிகழ்ந்தால் உண்டு. அதுவும் விண்வெளியில் இருக்கும் பயணச் சிக்கல்கள், பயண நேரம் இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது தற்செயலாக மட்டுமே நிகழ வாய்ப்பு இருக்கிறது


    “ஏன் அவர்களிடத்தில் நாம் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத அளவுக்கு முன்னேற்றம் இருந்தால், அதாவது நாம் நினைத்துக் கொண்டு இருக்கிற அதிக வேகம் கொண்ட  ஒளியின் வேகத்தைவிட பயணிக்கும் வசதி இருந்து அதன் மூலம் வேகமா வர வாய்ப்பு இருக்கிறதே?”என்றார்

    “இந்த விதத்தில் பார்த்தாலும் நமது பூமிக்கு குறிப்பாக வருவது என்னை பொறுத்தவரை தற்செயல்தான் என்றேன்

“சரி திடிர்னு இதைப்பற்றிய சந்தேகம்  உனக்கு எதுக்கு?

   “மனிதர்கள் வேற்றுகிரகவாசிகள் சிலரைப் பிடித்து சோதனை செய்வதாக சில புகைப்படங்களை பார்த்தேன் அதான் உங்களிடம் வந்தேன்.என்றேன்

“அந்தப் புகைப்படங்ககள் எப்படி இருந்தது?

   “அவர்கள் கிட்டதட்ட நம்மை போலவே இருந்தார்கள்,கால்கள்,கைகள், ஏன் விரல்கள் கூட,உடலமைப்பும் அப்படியே நம்ம மாதிரியே.. என்றேன்

   நான் சொன்னவுடன் புத்தி சிரிக்க ஆரம்பித்து இருந்தார். எனக்கு புரியவில்லை ஏன் என்று...

   “சரி என்னை சோதித்தது போதும்அவர்கள் இப்படி வருவது உண்மையா என்ன? என்றேன்

“இதுக்கு விடை நீயே சொன்னியே என்றார் சிரித்துக்கொண்டே..

    “அப்ப குறைவான சாத்தியம் என்றால் இவர்கள் வந்தது தற்செயலான விஷயம்னு சொல்றிங்களா?

   “ஆமாம் அந்த தற்செயலில் எந்த அளவு வாய்ப்பு இருக்கிறது என்றால் ஆயிரத்தில் ஒன்று கூட தேறாது. நமது பிரபஞ்சத்தின் அளவோடு ஒப்பிட்டு யோசிக்கும் போது அவர்கள் இங்கு வருவதுக்கு என்றார்.

“அப்படின்னா இந்த மாதிரி வருபவர்கள் யார்?

“வேற்றுகிரக வாசிகள் இல்லை நம்மவர்கள்தான்

“மனிதர்களா?

   “ஆமாம் கண்டிப்பா. அது மனிதர்களே தான். அதான் நீயே சொன்னியே எல்லாமே நம்மை போலவே இருக்குன்னு

   “இருந்தாலும் இது எப்படி சாத்தியமாகும் நம்மவர்கள் பறக்கும் தட்டுகளில் அல்லது வேறேதாவது விமானத்தில் வந்து வித்தியமாக இறங்குவது?

   “அது கால இயந்திரம் அவர்கள் வசிப்பதும் இதே பூமியில்தான். எல்லாம் காலம் சம்பந்தப்பட்டது என்றார்

“சுத்தமா புரியலை என்றேன்

    “உனக்கு கால இயந்திரத்தின் மூலம் பயணித்தால் காலத்தில் பின்னோக்கி செல்லலாம் என்பதில் நம்பிக்கை இருக்கா?

“இருக்கு

   “அப்படியே போகின்றாய் என்று வைத்து கொள்வோம் நீ போகின்ற இடத்தில வாழும் மக்கள் நீ இருக்கும் இதே நிலையில் இருப்பார்கள் என்று அர்த்தமில்லையே, அதாவது அவர்கள் அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இருப்பார்கள்,வாழ்வார்கள். சொல்வதென்றால் அவர்கள் உன்னை பார்த்தால் நீ அவர்களுக்கு ஒரு வேற்றுகிரகவாசி

   “அப்படின்னா இவர்கள் மனிதர்களின் முன்னோடியா இல்லை ஏற்கனவே வாழ்ந்து அழிந்தவர்களா?

   “காலத்தில் அழிவு என்று ஒன்றும் இல்லை நீ எதை வேண்டுமானாலும் கால இயந்திரத்தின் மூலம் சென்று அது இருப்பதை பார்க்க முடியும் போது. அதன் படி பார்த்தால் நமக்கு பிந்தைய உலகம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. எதிர்கால உலகமும் இதே பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்

   “அப்படி என்றால் இவர்கள் மனிதர்களில் இருந்து செல்கள்,ஜீன் களில் mutation ஏற்ப்பட்டு பரிணாம வளர்ச்சி பெற்ற நம்மின் அடுத்த கட்ட இனம் என்கிறீர்களா?

   “கண்டிப்பாக......  காலத்தில் பின்னோக்கி வந்து இருக்கிறார்கள் அவர்கள் வாழும் காலதில் இருந்து. அதாவது அவர்கள் நமக்கு முன்னாடி இருக்கும் காலத்தில் வாழ்பவர்கள்.

   கொஞ்சம் யோசிக்கவே சிக்கலாக இருந்தது. நமக்கு முன்னாடி ஒரு காலம், அதிலும் வாழ்க்கை என்பதை.

   “எனது அடுத்த முப்பது வருஷம் கழிந்த வாழ்க்கையைப்  பார்க்கமுடியும் அப்படித்தானே?”

    “பார்க்க முடியும் ஆனால் அங்கு போய் வாழ, ஏதாவது மாற்றம் செய்யமுடியாது ஏனென்றால் அவர்களுக்கு நீ ஒரு வேற்றுகிரக வாசி. பிடித்துவைத்து சோதிப்பார்கள்

   “இப்படி தொடர்ந்து கொண்டே போனால் முதல் தலைமுறை எது என்று எந்த வருடத்தில் போய் கண்டுபிடிப்பது? என்றேன்

   “அது அவர்களே பின்னோக்கி வந்து சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.  

“இதை எல்லாம் நான் எப்படி நம்புவது?

   “நீயும் முன் அல்லது பின் காலத்துக்குச்  சென்று பார்க்காமல் இதை நம்ப முடியாது என்ன போறியா?  பிடித்து வைத்து சோதிப்பார்கள் என்றார் சிரித்துகொண்டே.

அது....


    இதுக்கு மேலும் பொறுத்து இருக்க பொறுமையில்லை.அதை தேடி நிறையா படித்து குழம்பியாகிவிட்டது.விடைதான் கிடைத்தபாடில்லை. ஐன்ஸ்டீன் சொன்னதில் இருந்து எதாவது கிடைக்கும் அல்லது ஹாவ்கிங் எதாவது புதியதாக செய்வார் என்று இதுவரை பொறுமையாக காத்து இருந்துவிட்டேன்.

   சரி அறிவியலில்தான் விடை கிடைக்க நேரம் ஆகும் ஆன்மிக வழியில் எதாவது கிடைக்குமா என்று யோசித்தால் அந்த பக்கம் போகவே பிடிக்கவில்லை. நான் அதை கொடுக்கிறேன் இதை கொடுக்கிறேன் முக்தியை அடையபோகிறேன் என்று நல்ல இலக்கண நிறைந்த தமிழை பேசிக்கொண்டு ஆசிரமங்கள் துறந்துவிட்டு பின் பெண்களுக்காக கதவையும் ஜன்னலையும் மட்டுமே திறப்பதில் குறியாயிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆன்மிகம் தன்னை ஒரு நல்லவனாக காட்டவும், அதுக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு சில வேலைகளை செய்ய மட்டுமே என்பதை உணர்ந்தேன்.

   பயனில்லாமல் போனதால் நானே எனது முயற்சியை தொடங்க தீர்மானித்து அதற்கு உரிய வேலைகளை துவங்கியிருந்தேன்.மற்றவர்களை போல துவக்கத்தில் இருந்து ஆராச்சி செய்து அது தவறு இது தவறு என்று ஆராய்ந்து எனது பதிலை தேடினால் அதுக்கு  என் வாழ்க்கையில் மீதி இருக்கும் நாள்கள் போதாது.எனவே வித்தியாசமாக வேகமாக எதாவது செய்ய எண்ணினேன்.

    எனது முறைக்கு சாத்தியம் நிறையவே இருந்தது.அதாவது ஒரு மூளையை ஸ்டெம் செல்கள் மூலம் தனியாக வெளியில் வளர்த்து அதை செயற்கையாக கட்டுபடுத்தி இதுவரை நாம் கண்டுபிடித்த எல்லா தகவல்களையும்,தத்துவங்ககளையும் அதற்குள் கொடுத்து அதை புரிந்து கொள்ள செய்து அதனிடம் நமக்கு வேண்டிய கேள்விகளை கேட்டால் பதில் தரும்படி அமைப்பதுதான் எனது முறை.

   இது எப்படி கணினி hard disk ல் எல்லாதகவல்களையும் சேமித்து வைத்துவிட்டு தேவையான தகவல்களை தெரிந்துகொள்வது போன்றதுதான்.கணினிக்கும் நான் செய்ய போகும் முறைக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.மூளை கொடுத்த தகவல்களை ஒன்றோடு ஒன்று பொருத்தி பார்த்து அதில் இருந்து தானாக யோசிக்கும்.அதோடு சிந்தனை திறனும் அதிகம்.


   இதுவரை ஸ்டெம் செல்களை வைத்து மூளையின் பாதிப்படைந்த (அல்சிமர் நோயால்) செல்களை மட்டுமே புதுப்பித்து கொண்டு இருந்தனர். இதில் அடுத்த கட்டமாக மூளையையே புதியதாக உருவாக்க போகிறேன்.

   சிரமமான விசயம் அதை தனியாக உருவாக்கி,செயற்க்கையாக oxygen கொடுத்து metabolism நடக்க வைத்து, அதில் உள்ள பில்லியன் நியூரன் செல்களை கட்டுபடுத்துவது.

    புதியதாக சில மாற்றங்களை செய்தேன் வெறும் மூளை மட்டும் என்பதால் அது நமது உடல் செய்யும் அன்றாட பணிகளுக்கான கட்டளைகள் கொடுக்கும் தன்மையை தடுத்து இருந்தேன்.இதன் மூலம் அதன் திறன் அதிகரிக்கும் என்ற எண்ணம.அதாவது அதன் வேலை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் யோசித்து பதில் அளிப்பது மட்டுமே.

    எனக்கு இருந்த சில சந்தேகங்கள் வைத்தியிடம் வேலைபார்க்கும் புனியின் உதவியால் தீர்ந்தது.நல்ல அறிவாளி பெண்.குறைவாக பேசி நிறையா யோசிப்பவள்.அவளின் அறிவை விட அவள் பேசும் அழகு,யோசிக்கும் வேளைகளில் அவள் செய்யும் பாவனைகள பிடித்து இருந்ததுதான் உண்மை.

   அவளின் உதவியால் ஸ்டெம் செல்களை பிரித்து க்ளோனிங் முறையில் மூளையை உருவாக்கி இருந்தேன். அது இப்போது நான் செயற்கையாக உருவாகியிருந்த ரத்தத்தை அனுப்பும் இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்து கொண்டு இருந்தது.

   வெற்று மூளை எதாவது தகவல்களை கொடுத்து அதுசம்பந்தமான கேள்விகளை கேட்டால் பதில் அளிக்கும் அவ்வளவே.

   அதுக்கு தகவல்களை கொடுப்பதும்,பெறுவதும் பெரிய விசயமாக இல்லை.மூளைக்கு நமது உடலின் பகுதிளில் இருந்து உணர்வு தகவல்களை பரிமாற்றம் செய்யும் dendrite ஐ இந்த தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியிருந்தேன்.

   நான் கொடுக்கும் தகவல்கள் dendrite உதவியால் axon வழியாக நியுரன்களுக்கு neurotransmitter மூலம் கடத்தப்பட்டு சேமித்து வைக்கப்படும்.

   நியுட்டன் காலத்துக்கு முன்னில் இருந்து இப்போது வரை உள்ள எல்லா தகவல்களையும் உள்ளே அனுப்பும் எனது வேலை அடுத்த சில நாள்களில் முடிந்து இருந்தது.இடையிடையே எப்படி வேலை செய்கின்றது என்பதை சில கேள்விகள் கேட்டு சோதித்து பார்த்ததில் நான் நினைத்ததைவிட அருமையாகவே வேலை செய்தது.

   கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு எனக்கு விடை கிடக்க வேண்டிய கேள்வியை கேட்க எண்ணி அதுக்கு தயார் செய்தேன்.கேள்விக்கான எல்லா தகவல்களும் கொடுத்தாயிற்று. அதுக்கு தெரியாத ஒன்றுமே இல்லை என்ற நிலை. எனது கேள்விகளை கோர்வையாக உள்ளே அனுப்பினேன்..

1)     1) பிரபஞ்சம் முதலில் எப்படி தோன்றியது?

2)     2) தானாக தோன்றியதா? எதாவது ஒரு சக்தியால் தோற்றுவிக்கப்பட்டதா?
3)     3) அப்படியெனில் அந்த சக்தி என்ன?
4)     4)அதை சரியாக புரியும்படி விளக்க முடியுமா?

   இந்த கேள்விகளை உள்ளே அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்து இருந்தேன்.இந்த  நேரத்தில் உள்ளே செல்லும் oxygen அளவை அதிகரித்து இருந்தேன் அது யோசிக்க மிக உதவியாக இருக்கும் என்பதற்காக.

   தகவல்களை கொடுக்க ஆரம்பித்து இருந்தது. அதை கணினி புரிகின்ற மொழியில் மாற்றி கொடுத்தது. அதை படித்து முடித்த போது வெறுபுதான் மிஞ்சியிருந்தது. அதை அப்படியே இங்கே கொடுக்கிறேன்...

   இது மிக எளிமையான கேள்விகள்தான் பதில் சொல்கிறேன்.இருந்தாலும் நீ அதிகம் கேள்விகள் கேட்கின்றாய்.காதலிக்க ஏதும் பெண்கிடைக்க வில்லை என்பது உன் இந்த தேடலில் இருந்து தெரிகின்றது. இதற்கான பதிலுக்கு நீ இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும்.அந்த முறையைத்தான் உனக்கு சொல்ல போகிறேன்.அதில் உனக்குண்டான பதில் கண்டிப்பாக கிடைக்கும். இதோ..


   முதலில் ஒரு மூளையை செயற்கையாக உருவாக்கி அதை உன்கட்டுபாட்டில் வைத்து அதுக்குள் தகவல்களை கொடுத்து அந்த தகவல்களில் இருந்து பதில்கள் கிடைக்கும் வகையில் உருவாக்கு. எனது அறிவின் மூலம் உனக்கு இதைத்தான் சொல்ல முடியும்.ஆனால் நான் சொன்ன இந்த முறையில் கண்டிப்பாக உன் கேள்விக்கு விடைகிடைக்கும்.

இதை சொல்லி முடித்து விட்டு வழக்கம் போல ..

வேற ஏதும் கேள்விகள் இருக்கா? என்றது


(நான் மேலே சொல்லியிருப்பது பொதுவாக நமது மூளை வேலை செய்யும் விதம்தான். நமது மூளையில் பில்லியன் அதிகமான நியுரன்கள் இருக்கும்.இது கொஞ்சம் வித்தியாசமான செல்கள். ஒவ்வொரு செல்லும் ஒரு உடலமைப்பை கொண்டு இருக்கும்.அதன் பெயர் axon. இதுதான் ஒரு நியுரன்களில் இருந்து மற்ற நியுரன்களுக்கு தகவல்களை கடத்தும். இந்த செல் உடலமைப்பு மற்ற செல்களைபோலவே ஒரு nucleus ஐ கொண்டு அதன் மூலம நியூரன் செல்களை கட்டுபடுத்தும் வேலைகளை பார்க்கும்.

உடலில் உள்ள உணர்வு செல்களில் இருந்து முதலில் dendrite  பகுதி வழியாக நியூரனுக்கு தகவல்களை கடத்தி பின் axon மூலம் மற்ற நியூரன்களுக்கு வேதி வினை பொருள்கள் (neurotransmitter) மூலம் தொடந்து கடத்துகின்றது.)

ரோமியம்.


“ரோமி இங்கே வாயேன்?

   “என்ன..இப்பதனே கொஞ்சநேரம் முன்னாடி கொடுத்தேன்...இரு வரேன்.என்று சொல்லிகொண்டே அவள் படித்து கொண்டு இருந்த புத்தகத்தில் எந்த பக்கத்தை படிக்கிறளோ அந்த பக்கம் நோக்கி தாளின் முனையை மடக்கி வைத்துவிட்டு வந்தாள்.

   இப்படி பக்கத்தை அடையாளத்துக்கு மடக்கிவைப்பது என் பழக்கம்.இதை பார்த்த ரோமி எனக்கும் கற்றுகொடு என்று சொல்ல கற்றுகொடுத்தேன்.இப்போது அவளுக்கு படிக்க கொடுத்து இருப்பது எல்லாம் காதல் சம்பந்தமான புத்தகங்ககள்.நிறைய முறை அவளிடம் காதலைப்பற்றி சொல்லி எனக்கே அழுத்துவிட்டது.அதனால் அவளே படித்து புரிந்துகொள்ள இந்தமுடிவு.


“எதுக்கு கூப்பிட்டே இப்ப?

“ஒரு கவிதை சொல்லணும் என்றேன்

“இதை வழக்கம்போல அங்கே இருந்தே சொல்லியிருப்பெனே?

   “இல்ல இதுகொஞ்சம் வித்தியாசமானது,நம்ம தலைவர் சுஜாதா சார் ஹைக்கூ எப்படி எழுதனும்னு சொல்லியிருப்பதை படிச்சேன்.அதே மாதிரி யோசிச்சுபார்த்தேன் எனக்கு வரலை அதான் உன்கிட்ட கேட்கிறேன்.

“சரி எப்படி இருக்கணும் ஹைக்குன்னா?

   “அதிகபட்சம் நான்குவரிகளுக்கு மேல இருக்க கூடாது,கற்பனை காவியம் இல்லாமல் கொஞ்சம் உண்மையும் இருக்கணும் இந்த மாதிரி ஒன்னு சொல்லு பார்ப்போம்.

  “இரு சொல்றேன் என்று யோசிக்கும் பாவனையில் இருந்தது..இது சரியா பார்..

தூங்கபோகும் முன்
தூக்கமாத்திரைகளாக –என்
முத்தங்களை நித்தம் – நீ
கேட்கிறாயே ஏன்?

  “அடிப்பாவி உண்மை இருக்கணும்னு சொன்னா இப்படியா நம்ம ரகசியத்தை கவிதையா எழுதுவே?

   “எனக்கென்ன தெரியும் இது ரகசியம்னு, நீ சொன்ன வார்த்தைகளைவைத்து என் நினைவு பகுதிகளுக்குள் தேடிபார்த்தேன் இதுதான் கிடைத்தது. வேணும்னா வேற சொல்லவா?

   “வேண்டாம் நீ வேற ஏதும் சொல்ல வேண்டாம் போய் நான் கொடுத்த புத்தகங்ககளை படித்து காதலை வழர்த்துக்கோ போ என்றேன் 


“கணேஷ் எனக்கு ஒரு சந்தேகம்?

“என்ன?

“எனக்கு நீ காதலை தவிர வேற எதுவும் சொல்லித்தர மாட்டியா என்ன?

  “வேற என்ன உனக்கு தெரிஞ்சிக்கிரனும், அறிவியல் புத்தகங்கள் நிறையா அடிக்கி வச்சிருக்கேன்ல அதையும் எடுத்து படிச்சிக்கோ

  “இல்ல இதுவரை நான் படிச்ச புத்தகத்துல எல்லாம் காதலுக்கு அடுத்து திருமணம் ஒன்னு சொல்றாங்க,செய்றாங்க அது சம்பந்தமா எனது நினைவு பகுதியில் இதுவரை நீ எதையுமே பதியவே இல்லையே ஏன்?

   “காதல் மட்டும்தான் உன்னிடம் இருந்து தேவை திருமணம் உன்னோடு முடியாத காரியம் அதான்..நீ ஒரு இயந்திரம் மறந்துடாதே

“இருந்தாலும் உன்னை எனக்கு ரெம்ப பிடிக்குமே

   “அப்படி இருக்க நான் உனக்கு கற்றுகொடுத்து(robot teaching) இருக்கேன் அவ்வளவுதான்

   “கணேஷ் இந்த வார்த்தைகள் எல்லாம் எனதுள் உள்ள தகவல்களை எதோ செய்து மத்தியபகுதியில் ஒரு வித்தியாசமான வலிப்பது உணர்வை கொடுக்குது. நம்பு நம் காதல் உண்மைகாதல்.
 
   “உனக்கு உண்மைக்காதல்னா என்னனு தெரியுமா?அது ஒரு பெண்ணின் மீது வரும்.ஆழமான புரிதல் ஒரு கட்டத்தில் இதயம் இடமாறிய உணர்வு இனி எப்போதும் பிரியவே முடியாது என்ற நிலை இருவருக்கும் அதுதான்

   “அப்படின்னா என்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை கல்யாணம செஞ்சிப்பியா என்ன? இது ஏமாற்று வேலை இல்லையா?

“இல்லை உன்னை எதுக்கு படைச்சேனோ அந்த வேலையை மட்டும்தான் நீ செய்றே பின்ன என்ன? இதுல எங்கே உண்மைக்காதல்?

   “என காதல் உண்மைதான் நீ சொன்னாலும் சொல்லாட்டலும் அதை நான் நிரூபிப்பேன் பார் என்று ஒரு வித சோகத்தோடு சொல்லிவிட்டு மெதுவாக என்னை விட்டு நகர்ந்து சென்றது.

   இந்த மாதிரியான உணர்வை ரோமியிடம் முதன்முறை பார்க்கிறேன். தனக்குள் ஏதோ வலிப்பதாக சொன்னது, எனது காதலும் உண்மைதான் என்று சொல்ல ஆரம்பித்தது. இது எல்லாம் அதுக்கு நான் கற்றுகொடுக்கதா ஒன்று. ஒருவேளை புத்தகங்களில் படித்து அதை அதிகம் யோசித்து தனது மத்திய பகுதியில் இருந்து பெற்றிருக்கலாம்.

   அது சென்ற விதத்தை பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. என்னதான் நானே என்மீது அன்புவைக்க உருவாக்கியிருந்தாலும் ரோமியின் நடத்தையில் ஒரு இயந்திரத்தனமான உணர்வை இதுவரை பார்த்தது இல்லை.

   இதை யோசித்துகொன்டே புத்தக வாசிப்பில் இருக்க ரோமி அருகில் வந்து நிற்பது தெரிந்து புத்தகதை விளக்கி பார்த்தேன்.....

   “கொஞ்சம் வலியை பொறுத்துக்கோ கணேஷ் ..நம் காதலும் உண்மைதான் அதை நிரூபிக்க இதைவிட நல்ல வழி தெரியவில்லை..நீதானே சொன்னே உண்மைகாதல்னா இதயம் மாறனும்னு இப்ப மாத்தபோறேன் என்று சொல்லியபடி கையில் கத்தியோடு என்னை நோக்கி குனிந்தாள்.


(இது அடியேன் ஏற்க்கனவே எழுதிய ரோமி என்ற கதையின் மற்றொரு கோணம்.)